இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வீசத் தொடங்கி உள்ளது. இதனை, தமிழ்நாடு உள்பட் மத்திய அரசு வரை பலரும் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான், இந்தியாவில் நேற்றை தினம் வெறும் 58 ஆயிரமாக பதிவான கொரோனா பாதிப்பானது, கடந்த 24 மணி நேரத்தில் அது இன்னும் ஒரே அடியாக அதிகரித்து 90,928 பேருக்கு கொரோனா தொற்று தாக்கி இருக்கிறது.

அதாவது, இந்தியாவில் கடந்த வாரம் வரை கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து தீவிரமாக பரவி வருகிறது. 

இப்படியாக ஒரே அடியாக அதிகரித்துள்ள இந்தியாவின் கொரோனா பாதிப்பு தொற்று தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதன் படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக” தெரிவித்து உள்ளது.

“இந்த கொரோனா பாதிப்பானது நேற்று முன் தினம் 37 ஆயிரத்து 379 ஆகவும், இது நேற்றைய தினம் 58 ஆயிரத்து 97 ஐ விட மிக அதிகம்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது.

“இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக அதிகரித்து உள்ளது” என்றும், மத்திய அரசு கவலைத் தெரிவித்து உள்ளது. 

அத்துடன், “கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்து உள்ளனர் என்றும், இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக உயர்ந்து உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,85,401 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

“ஆனாலும், இந்த கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக உயர்ந்து உள்ளது” என்றும், மத்திய அரசு கவலைத் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, “நாடு முழுவதும் இது வரை 148.67 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும்” மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது விளக்கமாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.