தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியிருந்தது.  ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் கணிசமாக குறைந்ததையடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கிக்கொண்டது. இருப்பினும் முககவசம் அணிவதும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை மட்டும் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 3.2 லட்சத்திலிருந்து 3.8 லட்சம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா, ஓமைக்ரான் வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என எண்ணக்கூடாது, இன்னமும் 20 - 30 பாதிப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட வேண்டாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மற்றபடி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் என கூறவில்லை. 

மேலும் பேசியவர் RNA வைரஸ் உருமாறுவது வழக்கம். இதனால் பதட்டமடைய வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். விழிப்புணர்வில் மாற்றம் வேண்டாம் என்று கருதினால் தான் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியும். கவனக் குறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. தமிழகத்தில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. ஒமைக்ரான் பரவலின்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம், சுமார் 4 கோடி பேர்  தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இவைதவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 92 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

மேலும் அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இனி வரும் நாள்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக நடத்தப்படும் எனவும், தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா்ந்து தடுப்பூசி வழங்கப்படும் எனவும், போதிய அளவில் தடுப்பூசி இருப்பு தமிழகத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3292 கிராம பஞ்சாயத்துகளிலும்,121 நகராட்சிகளிலும் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.