சென்னை மாநகராட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் உள்ள ஹைலைட்ஸ் பற்றி தற்போது பார்க்கலாம். 

சென்னை மாநகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய தினம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் சற்று முன்னதாக தாக்கல் செய்தார். இதில், சென்னையின் வளர்ச்சியை முன்வைத்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அதன்படி,

- சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 4.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- குறிப்பாக, டிரோன்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த அசத்தலான புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

- இப்படி, கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த 2022-2023 ஆம் நிதியாண்டில் 30 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள், 100 எண்ணிக்கையிலான கையினால் எடுத்துச் செல்லும் புகைப் பரப்பும் எந்திரங்கள் மற்றும் 200 எண்ணிக்கையிலான கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. 

- கடந்த ஆண்டைப் போலவே ஆளில்லா வானூர்தி மூலம் கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். 

- 2022-2023-ம் நிதியாண்டில் வீடு இல்லாதவர்களுக்கான காப்பகங்கள் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டு, அவை 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

- சென்னையில் உள்ள குளங்கள் யாவும் 143 கோடி ரூபாயில் மேம்படுத்துப்படும். 

- 30 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளுக்கு 32.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் 80 லட்சம் ரூபாய் செலவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

- சென்னை மாநகரை அழகுபடுத்தும் விதமாக சென்னையின் முக்கியமான 26 இடங்களில்  நீருற்றுக்கள் வடிவமைக்கப்படுகிறது. 

- 26 இடங்களில் அமைக்கப்படும் இந்த நீருற்றுக்கள் அமைக்கும் பணிக்கு 1.29 கோடி ரூபாய் நிதியானது, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளது.

- அந்த வகையில், எண்ணூர் விரைவு சாலை, சைக்லோன் ஷெல்டர் அருகில், மஞ்சம்பாக்கம், மணலி, 200 அடி சாலை சந்திப்பு,  ஜி.என்.டி சாலை, மூலக்கடை சந்திப்பு, 200 அடி சாலை எம்.ஆர்.எச்.சாலை ரவுண்டானா,  பாந்தியன் சாலை, மான்டியத் சாலை மற்றும் ஆர்.கே லட்சுமிபதி சாலை சந்திப்பு, ராஜாஜி சாலை - என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த நீருற்றுக்கள் அமையப் பெற உள்ளன.

- 143 கோடி ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்தும் பணி நடைபெற இருக்கிறது.

- பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள குளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 5 மிகப்பெரிய குளங்கள் புனரமைப்பு பணி 143 கோடி ரூபுாய் மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ரூட் 2.0 திட்ட நிதியில் இருந்து கீழ்கண்ட இடங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

- அதன்படி மணலி ஏலி, சாத்தாங்காடு குளம், சடையன்குப்பம் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம் ஆகியவை மேம்படுத்தப்படுகிறது.

- நடப்பு நிதியாண்டில் இருந்து மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக, மண்டலம் 4 மற்றும் மண்டலம் 6 ல் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதியின் கீழும், மற்ற மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் மூலமும், வருடம் முழுவதும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

- 281 மாநகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் ரூபாய் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

- 72 லட்சம் மாணவர்களுக்கு 7.50 கோடி ரூபாய் செலவில் சீருடை வழங்கப்படும்.

- நிர்பயா நிதி மூலம் 23.66 கோடி ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- பள்ளிகளில் 5.47 கோடி ரூபாயில் கண்காப்பு கேமிரா பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறை ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பது முக்கிய விசயமாக அமைந்து உள்ளது.