தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் வீரபாண்டியபுரம். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாரான வீரபாண்டியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வரும் ஜெய், இயக்குனர் கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, பட்டாம்பூச்சி என வரிசையாக ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன

இந்த வரிசையில் அடுத்ததாக ஜெய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் குற்றம் குற்றமே.  இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஜெய் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள குற்றம் குற்றமே திரைப்படத்தில் காளி வெங்கட் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் அஜிஷ் இசை அமைத்துள்ள குற்றம் குற்றமே படத்திற்கு மு.காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். D கம்பனி தயாரிப்பில் AXESS ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் குற்றம் குற்றமே திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10.30am மணிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.