பாலியல் வழக்கில் சிக்கி பல மாதங்களாக சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரித்தவண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி  நிறுவனர் சிவசங்கர்பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சிவசங்கர் பாபா மீது 8 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு செங்கல்பட்டுகிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்க கோரி சிவசங்கர்பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில்  அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சிவசங்கர் பாபாவிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருக்கும் நிலையில் ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் அவர் சாட்சியங்களை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டது. இந்த சூழலில் சிவசங்கர் பாபா ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அதனையடுத்து இந்த வழக்கில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து கைது செய்யப்பட்டிருந்த சாமியார் சிவசங்கர் பாபாவிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது, குற்றம் தொடர்புடைய கேளம்பாக்கம் பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஒருவேளை சாட்சியங்களை கலைக்க முற்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். அதேபோல் தமிழக காவல்துறை சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் கொடுக்க வாருங்கள் என விளம்பரம் கொடுக்கக்கூடாது  என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளத . சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 8 வழக்குகள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.