தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் கலையரசன் தொடர்ந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக வில்லனாக குணச்சித்திர நடிகராக பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த கலையரசன் அதன் பிறகு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

தொடர்ந்து கபாலி, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, லாபம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கலையரசன் நடித்துள்ளார். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலையரசன், கதாநாயகனாக நடித்துள்ள டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் சிலம்பரசன் & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கலையரசன் நடிப்பில் வித்தியாசமான ஃபேண்டசி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக அடுத்து வெளிவரவுள்ளது குதிரைவால் திரைப்படம். இப்படத்தில் கலையரசனுடன் இணைந்து காலா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை அஞ்சலி பாட்டில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சிதின் நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள குதிரைவால் படத்தை மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கியுள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள குதிரைவால் படத்திற்கு பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வருகிற மார்ச் 18-ம் தேதி ரிலீஸாகவுள்ள குதிரைவால் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள குதிரைவால் படத்தின் ட்ரைலர் இதோ…