இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரட் வீரருமான  கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு MS தோனி அண்டோல்ட் ஸ்டோரி பயோபிக் படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்தது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷன்ட் சிங் ராஜ்புட் நடித்த MS தோனி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட சபாஷ் மித்து திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமியின் பயோபிக் படத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக மற்றொரு கிரிக்கெட் வீரரின் பயோபிக் படமாக தயாராகி உள்ளது கௌன் பிரவீன் தாம்பே. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பிரவீன் தாம்பே ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட் அணியிலும் ஒரு வாய்ப்பு கூட தரப்படாமல் ஒதுக்கப்பட்டவர்.

சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் & வீரேந்தர் சேவாக் இவர்களின் வரிசையில் அந்த காலகட்டத்தில் முக்கிய கிரிக்கெட் வீரராக ஜொலிக்க வேண்டிய பிரவீன் தாம்பே எந்த வாய்ப்புகளும் கிடைக்காத போதும் தனது விடா முயற்சியால் தொடர்ந்து போராடி தனது 41-வது வயதில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் முறையாக சர்வதேச அரங்கில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரவீன் தாம்பேவின் கடினமான இந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கௌன் பிரவீன் தாம்பே பயோபிக் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே பிரவீன் தாம்பே கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மனைவியாக காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஃப்ரைடே ஃபிலிம் மற்றும் எ பூட் ரூம் ஸ்போர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஜெயபிரத் தேசாய் இயக்கியுள்ளார்.

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் பிரவீன் தாம்பே திரைப்படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…