“இந்தியா முழுவதும் “ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த நாங்கள் தயார்” என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேசி உள்ளது, அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முதலில் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. 

இந்த திட்டத்தின் மூலமாக, “வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும் என்பதுடன், தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்” என்கிற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதனையடுத்து, மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், “ஒரே நாடு; ஒரே பத்திரப் பதிவு திட்டமும், எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யும் முறையும் அமல்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தான், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை என்றும், இந்தியா முழுவதும் அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது” என்றும், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா கூறி உள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை என்றும், ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தயாராக உள்ளது என்றும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்றும், அவர் கூறினார்.

அதாவது, “கடந்த 2016 ஆம் ஆண்டு முதற்கொண்டே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்தை பிரதமர் மோடி தொடர்ந்து முன்வைத்து வருகிறார். 

இதற்காக சில திட்ட வடிவங்களையும் கடந்த 2017 ஆம் ஆண்டில் வகுத்துக் கொடுத்த நிதி ஆயோக் அமைப்பு, கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தது, சட்ட ஆணையம்.  

அதன் படி, கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான பாஜக தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இடம் பெற்றிருந்தது, அப்போதே அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் வரவேற்பு தெரிவித்து, கருத்தும் தெரிவித்தது.

மேலும், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினால், தேர்தல் செலவுகள் குறையும் என்றும், அடிக்கடி தேர்தல் வருவதை தவிர்ப்பதன் மூலம் ஆளும் கட்சிகள் மக்கள் நலன் நிர்வாகம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றும், 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும் என்பதால் மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் போன்ற காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் மிக அவசியம்” என்று, பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல என்றும், அது இந்த காலகட்டத்தின் தேவை என்றும், மக்களவைத் தேர்தல்,   அனைத்து மாநில சட்டசபை தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும் என்றும், தனித்தனியே பட்டியல் என்பது நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் செயல்” என்றும், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், “ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் தயார்” என்று, தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா பேசியிருப்பது, நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.