வேலூர் மாநகரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கைவரிசை காட்டிய கும்பலை 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கடைக்கு வெளியே சிசிடிவி கேமரா இல்லாததால் விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

jos alukkas

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையை வழக்கம்போல் இரவு 10 மணியளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர்.நேற்று காலை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்க வைர நகைகள் கொள்ளை போயிருந்ததன.

மேலும் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, துளையை பார்வையிட்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மோப்ப நாய் கொண்டு கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்கிறார்கள். வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நகைக் கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு துளை போடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  மோப்ப நாய் ஷிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன அவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். 
சுமார் 35 கிலோ வரையிலான தங்கம், வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி. பாபு மற்றும் வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். கடையில் இருப்பு உள்ள நகைகளை நேற்று இரவு வரை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் கடையின் தரை தளத்தில் இருந்த 15 கிலோ தங்க நகைகள் 500 கிராம் வைர நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.

ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் கைவரிசை காட்டிய நகை கொள்ளையர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர் காவல்துறையினர். கொள்ளை நடந்த கடையின் சுவரோரம் "விக்" ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களில் ஸ்ப்ரே அடித்து தப்பிச்சென்றுள்ளனர். நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையை தொடந்து வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.