பள்ளி மைதானத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு பிரியதர்ஷினி (10), பிரித்திகா (9) என்ற மகள்களும், நவீன்குமார் (6) என்ற மகனும் உள்ளனர். 

குழந்தைகள் 3 பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் 110 மாணவர்களே படித்து வருகின்றனர். இவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கு பத்து ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தப் பள்ளியில் பிரியதர்ஷினி 6-ம் வகுப்பும், நவீன்குமார் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சத்யராஜின் இரண்டாவது மகள் பிரித்திகா 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சத்யராஜின் குழந்தைகள் 3 பேரும் பள்ளிக்கு சென்றனர். 

காலை 11 மணி அளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்ப வராததால் சக மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவளை தேடியுள்ளனர். அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் ஒரு சிறுமி கிடந்தாள். 

dindigul school student

ஆனால் சிறுமியின் முகம் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் அது பிரித்திகாவா என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மாணவிகள் பிரித்திகாவின் அக்கா பிரியதர்ஷினியிடம் இதுகுறித்து கூறினர். 

அதைக்கேட்டு பதறிப்போன பிரியதர்ஷினி ஓடிச்சென்று பார்த்தபோது தீயில் கருகி கிடப்பது தனது தங்கை தான் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்தாள். உடனே பள்ளி நிர்வாகத்தினருக்கும், தனது தந்தை சத்யராஜூக்கும் அவள் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதைக்கேட்டு பதறி துடித்து பள்ளிக்கு ஓடிவந்த சத்யராஜ், தீயில் எரிந்து கிடந்த மகளை பார்த்து கதறி அழுதார். அப்போது சிறுமி பிரித்திகா உடலில் அசைவு தெரியவே மகளை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தந்தை சத்யராஜ் கொண்டு சென்றார். 

அங்கு அவளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுமார் 2 மணிநேரமாக வகுப்பறைக்கு மாணவி திரும்பி வராததை ஆசிரியர்களும் கவனிக்கவில்லை. 

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாண்டிக்குடி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவி எரிந்து கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு காலி தண்ணீர் பாட்டிலும், அதன் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

பின்னர் அவற்றை கைப்பற்றிய போலீசார் மாணவியை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்கள் எப்படி நுழைந்தனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

dindigul student tamil nadu

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளிடம் சம்பவம் நடந்த போது சந்தேகப்படும்படி யாரேனும் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே குழந்தையின் மர்ம மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய வந்த பழனி தி.முக. சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருடன் சிறுமியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி மாணவி பள்ளி வளாகத்திலேயே எரிந்துகிடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.