தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் திகழும் சீயான் விக்ரம் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

முன்னதாக புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இந்திய அளவில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில்  பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சீயான் விக்ரம் நடிப்பில், டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா  திரைப்படமும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படமும்  அடுத்தடுத்து வெளிவர தயாராகி வரும் நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் காரணமாக பரிசோதனை செய்ததில் விக்ரமுக்கு மிக மிதமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நடிகர் விக்ரம் விரைவில் பூரண குணமடைந்து வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டுகிறோம்.