வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jos alukas

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையை வழக்கம்போல் நேற்றிரவு 10 மணியளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். இன்று காலை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்க வைர நகைகள் கொள்ளை போயிருந்ததன.

மேலும் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, துளையை பார்வையிட்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மோப்ப நாய் கொண்டு கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்கிறார்கள். வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நகைக் கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு துளை போடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  மோப்ப நாய் ஷிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன அவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் இரவுநேர காவலர்கள் பணியில் இருந்ததால் நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைக்குள் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வளவு நகைகள் திருடு போய் இருக்கின்றன என்பது குறித்து நகைக்கடை அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் மேற்பார்வையில் கணக்கிடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து மீதமுள்ள நகைகளைக் கணக்கிட்டப் பின்னரே கொள்ளை போன நகைகளின் மதிப்பு குறித்து தெரியவரும் என்கிறது போலீஸ் வட்டாரம். வேலூரில் சமீபகாலமாக வழிப்பறி, செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பது பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கிறது.  தற்போது நடந்த கொலை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.