இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் குறித்து நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தேசிய குடும்ப சுகாதார கள ஆய்வு (2015-16)-ஐ அடிப்படையாகக் கொண்டு தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் பல பரிமாண வறுமைக் குறியீடு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது.  

இவை ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இளம்பருவ இறப்பு, பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சுகாதாரம், சமையல் எரிபொருள், குடிநீர், மின்சாரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட 12 அம்சங்களால் குறிப்பிடப்படுகின்றன.

நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) அறிக்கையின்படி  நாட்டில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தில் உள்ளது.

poverty india

ஜார்க்கண்ட் இரண்டாம் இடத்திலும், உத்தரப்பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மத்தியப் பிரதேசம் 4-வது இடத்திலும், மேகாலயா 5-வது இடத்திலும் உள்ளன. பீகாரில் 51.91 சதவீத ஏழைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் 42.16% ஏழைகள், உத்தரப்பிரதேசத்தில் 37.79% ஏழைகள், மத்தியப் பிரதேசத்தில் 36.65% ஏழைகள் மற்றும் மேகாலயாவில் 32.67% ஏழைகளும் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாநிலங்கள் பட்டியலிலும் பீகார்தான் முதலிடம் பெற்றுள்ளது. ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறனர்.

தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.

அதே வேளையில் நாட்டில் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் 0.71 சதவீதம் ஏழைகளே உள்ளனர் என்று கூறுகிறது நிதி ஆயோக் அறிக்கை. இதேபோல் நமது தமிழகத்திலும் 4.89 சதவீதம் ஏழைகள் மட்டுமே உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%), தமிழ்நாடு (4.89%), பஞ்சாப் (5.59%) மாநிலங்கள் உள்ளன.

poverty india

இந்தப் பட்டியலில் கேரளாவை விட தமிழகம் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களான தமிழகமும், கேரளாவும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்துள்ளது இந்த மாநிலங்களின் வளர்ச்சியையே காட்டுகிறது. பொதுவாக கல்வி, சுகாதாரத்துறைகளில் தமிழகமும், கேரளாவும் நல்ல தரமான கட்டமைப்புகளை கொண்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இங்கு வடமாநிலங்களை விட குக்கிராமம் முதல் மருத்துவ கட்டமைப்புகள், கல்வியின் தரம் மிகச்சிறப்பாக உள்ளது. அதுவும் கேரளாவை விட ஏராளமான வேலைவாய்ப்புகள் நிறைந்த தொழில்துறை மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. 

வடமாநிலங்களை விட தமிழகமும், கேரளாவும் எப்போதும் அதிக பாதுகாப்பு உள்ள மாநிலங்ககளாக உள்ளன. இத்தகைய கட்டமைப்புகள் உள்ளதால்தான் இந்த இரண்டு மாநிலங்களும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்துள்ளன.

நிதி ஆயோக்கின் இந்த ஏழ்மை குறியீட்டெண் அறிக்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு ஏழ்மை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐக்கிய நாடு கள் மேம்பாட்டு திட்டம் இணைந்து உருவாக்கிய ஆய்வு முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறும்போது, ‘‘இந்த தேசிய பன்முக ஏழ்மை குறியீட்டெண் ஆய்வறிக்கை இந்தியாவில் பொது கொள்கைகளை வகுக்க பெரிதும் உதவுகிறது. ஆதாரங்கள் அடிப்படையிலும், கவனம் செலுத்தும் தலையீடுகள் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு முறையில் யாரும் விடுபடவில்லை என்ற இலக்கை எட்ட முடிகிறது” என்றார்.