ஏழை எளிய மக்கள் வாழ்வில் வசந்த காலத்தை ஏற்படுத்தித் தந்த வசந்த் அன் கோ வசந்தகுமாரின் 72 வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, இணைய வாசிகளும் சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“வெளிச்சம் தரும் விளக்கு போல
நிழலைத் தரும் விருட்சம் போல
கொடுத்தே பழகியவர்
எச்.வசந்த குமார்!

வரலாற்று
வாழ்வு கண்ட
புன்னகை மன்னருக்கு
அவரது 72 வது பிறந்தநாளில்
ஒரு புகழ் வணக்கம்!

வசந்த அன் கோ உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் மறைவு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், அவர் வாழ்ந்த வாழ்க்கை என்பது, “வரலாற்று வாழ்வு கண்டது!” என்றுதான் சொல்ல வேண்டும்.

மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது கடின உழைப்பாள் உயர்ந்தவர் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார். அவரது வாழ்க்கையை நாம் என்றாவது ஒரு முறை திரும்பிப் பார்த்தால், அதில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டுகளும் வியர்வை துளிகளால் கட்டப்பட்ட “வெற்றிப்படிக்கட்டுகளாகவே” தலை நிமிர்ந்து உழைப்பின் கதைகள் பேசும். 

அந்த அளவுக்கு வெற்றிப்படிக்கட்டுகளை எழுப்பிய வசந்த் அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி எம்.பி.யாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவராகவும் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர் எச்.வசந்த குமார்.

இப்படியாக, தமிழகத்தின் புதிய அடையாளமாகத் திகழ்ந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இரவு 7 மணி அளவில், நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர், இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது புகழ் இன்றும் அழியாமல் மனம் வீசிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான், இன்றைய தினம் உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகள் “தமிழ் புத்தாண்டை” வெகு சிறப்பாகக் கொண்டாடி வரும் அதே வேளையில், எச்.வசந்தகுமாரின் 72 வது பிறந்தநாளையும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், “வசந்த் அன் கோ எச்.வசந்தகுமாரின் பிறந்த நாளில், அவரது ஒப்பற்ற அன்பையும் பாசத்தையும் நினைவு கூர்வதாக” அவரது மகனும், கன்னியாகுமரி எம்.பி.யுமான விஜய் வசந்த், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து என்றும் குடி கொண்டிருக்கும் அன்பு அண்ணாச்சியும், கலங்கரை விளக்காக என்றும் எங்களுக்கு நல்வழி தெளியச் செய்யும் எங்கள் அன்பு அப்பா H.வசந்த குமார் அவர்களின் பிறந்த நாளில், அவரது ஒப்பற்ற அன்பையும் பாசத்தையும் நினைவு கூர்கிறோம். தனது வாழ்வை மக்கள் பணியில் அர்ப்பணித்த மாமனிதரின் சேவைகளை நினைத்து பெருமை கொள்கிறோம்!” என்று, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

அதே போல், 

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”

“என்னும் வள்ளுவரின் வாக்குகிணங்கி, அப்பாவின் பெயரையும் புகழையும் நிலைநாட்ட உங்களையும் ஊரார் போற்ற நீடூழி வாழ வேண்டும்” என்று, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்துக்கும், பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல், "தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை; தந்தையை மிஞ்சிய தனயனாக வாழப் பாராட்டுக்கள்!” என்று, இணைய வாசிகள் பலரும், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்துக்கு வாழ்த்துக்களைக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.