பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பேத்கர் அன்ட் மோடி என்கிற  தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் பிரதமர் நரேந்திர மோடியையும்,   சட்ட மேதை அம்பேத்கரையும்  ஒப்பிட்டு ஒரு நூல் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த முன்னுரையில், பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.

மேலும் அந்த முன்னுரையில் அம்பேத்கரை தெரிந்து கொள்வதைப் போல அவரது கருத்தையும் சிந்தனைகளையும் செயல்படுத்துகின்ற அவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள இளையராஜா, நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை,சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மோடி அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய எத்தனிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது . நாட்டில் ரயில் போக்குவரத்து, சாலைகள், மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலக தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன .  சமூக நீதியை பொருத்தவரைக்கும் பல்வேறு சட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார். வீடுகள் மற்றும் கழிப்பிடங்களை எளிய மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து அந்நூல் குறித்து இளையராஜா தெரிவித்ததாவது முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. பெண் குழந்தைகளை பாது காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டமும் பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவு எடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்று இளையராஜா தெரிவித்தார்.

இந்நிலையில் இதனால் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.  திமுக பேச்சாளர் வே.மதிமாறன், திமுக செய்தி தொடர்பாளர் மனுஷ்யபுத்திரன், திமுக கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  இளையராஜா பாவம்  ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றி வளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என்று திருமாவளவன் விமர்சித்திருந்தார்

அதனைத்தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன்,  ’’உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? உதவாக்கரையும் உன்னதமாமனிதரும் ஒன்றா? கருப்புப் பணத்தின் கனம் அதிகரித்துவிட்டதால் இளையராஜாவிற்கு.ஏற்பட்ட அச்சப் பிதற்றல்!’’என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடி, அம்பேத்கர் ஒப்பீடு குறித்த இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

அதனைத்தொடர்ந்து கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.