கலாட்டா வாய்ஸ் நேர்காணலில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் சாதிய உணர்வும் மத உணர்வும் தனக்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

கலாட்டா வாய்ஸ் சேனலில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உடன் நேர்காணல் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது ”ஐபிஎஸ் அதிகாரி, இயற்கை விவசாயம் போன்ற கட்டமைப்பு உருவாக்கத்துடன் கர்நாடகாவில் இருந்து வரும் அண்ணாமலை, முதன் முதலாக கட்சியில் சேர்ந்தபோது, பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு பதிலாக பாரதிராஜா கட்சி என்று சொல்கிறார். தொடர்ந்து நகைச்சுவையாளராக பார்க்கப்படுகிறார். அதனை அண்ணாமலை மாற்றிகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா” என்று நெறியாளர் பாண்டேவிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு ரங்கராஜ் பாண்டே கூறுகையில் “கர்நாடக சிங்கம் என்று இங்கு வந்து கட்சியில் சேர்வதற்கு முன்பே அண்ணாமலைக்கு அந்த பிம்பம் கிடைத்தது. வாய்தவறி பேசாத தலைவர்கள்  இந்தியாவிலேயே இல்லை. அண்ணாமலை நகைச்சுவையாளராக பார்க்கப்படுகிறார் என்று நீங்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது, இந்த மாதிரி அவமரியாதை கொண்ட நோக்கம் இருக்கக் கூடாது. 

அண்ணாமலைக்கு எதிர்பார்ப்பு இயல்பிலேயே இருந்திருக்கிறது. கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதை நடுநிலையாளர்கள் கூட ஏற்றிருக்கிறார்கள். முழுமையான ஈர்ப்பு அண்ணாமலையிடம் இருக்கிறது. மீம்ஸ் போட்டு கிண்டல் பண்ணாத தலைவர்கள் யாருமில்லை. அண்ணாமலை மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கு. அதனால அவர் மீதான கிண்டல் அதிகமாயிருக்கு. 

rangaraj pandey

மழை வெள்ளத்தில் அண்ணாமலை போட்டோ ஷூட் பண்ணியிருக்காங்கனு சொல்கிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி, சசிகலா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட எல்லாரும் போட்டோ எடுத்திருக்காங்க. ஊடகங்கள் சரியாக காட்டுலனு நினைக்கிறபோது இந்த மாதிரி போட்டோ ஷூட் தேவைப்படும்’ என்று பாண்டே தெரிவித்தார். 

அதற்கு நெறியாளர் “பாஜக தமிழ் மாநில முன்னாள் தலைவர் எல்.முருகன் தலைவராக இருக்கும்போது வேல் யாத்திரை முன்எடுத்தது சரியான அரசியல். திமுக பகுத்தறிவு என்று பேசினாலும் திமுக கட்சிக்காரங்களே கையில் வேல் எடுக்கும் அளவிற்கு எல் முருகனின் அரசியல் இருந்தது. எல் முருகனின் அரசியலால் 4 பேர் இன்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார்கள்.

அப்படியான பார்வை அண்ணாமலை மீது ஏன் திரும்பவில்லை என்று நெறியாளர் கேட்டார். இதற்கு பதிலளித்த ரங்கராஜ் பாண்டே “சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த பையன். கோவையில் அற்புதமான கல்லூரி. வட இந்தியாவில் போய் படிக்கிறார். அங்கேயும் சாதிக்கிறார். இதெல்லாம் சுலபமான வேலைனு நினைக்கிறீர்களா? 

காங்கிரஸ் ஆட்சியில் ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றி இருக்கிறார். அவர் தொடர்ந்து நிலையான செயல்திறனுடன் இருக்கிறார். இளைஞர் என்பதால் இன்னும் கொஞ்சம் வேகத்தை கட்டுப்படுத்தலாம்” என்று பாண்டே கூறினார்.

அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் 150 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று அண்ணாமலை சொல்வது சரியா என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு, “மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எல்லோரும் தான் சொல்கிறார்கள். தடாலடியாக அண்ணாமலை செய்யும் விஷயங்களின் ரிசல்ட் தேர்தலில் ஜெயிச்சால்தான் தெரியும். 

மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட கூட்டணிக்கு நிறைய சீட் கொடுத்தாருனு நினைச்சேன். ஆனால் வெற்றிபெற்ற பிறகு தான் தெரிந்தது. முக ஸ்டாலின் செய்தது சரி என்று. அதேபோல் எல்.முருகன் தேர்தலுக்கு பின்னர்தான் என்ன செய்தார் என்று தெரிந்தது. அதுமாதிரி அண்ணாமலை இப்பொழுது செய்யறது கொஞ்சநாள் கழித்துதான் தெரியும்” என்று பாண்டே தெரிவித்தார். 
 
பாண்டே அவர்களுக்கு சாதிய உணர்வும், மத உணர்வும் ரொம்ப மேலோங்கி இருக்கிறதா என்ற நெறியாளரின் கேள்விக்கு, “ஆமாம். இல்லனு சொல்வேனா நினைச்சீங்க. நான் யார் என்பதில் மிகவும் நிறைவாக இருக்கிறேன். மகிழ்ச்சியா இருக்கிறேன்” என்று பாண்டே கூறினார்.

திருவள்ளுவர் இந்து என்று  கட்டமைக்கப்படுவது சரியா? என்ற நெறியாளரின் கேள்விக்கு “ஜி.யு.போப் காலத்திலிருந்து திருட பார்க்கிறார்கள். என்னை பார்த்துகொண்டிருக்க சொல்கிறீர்களா? என் சொத்து அவர். அவரை கிறிஸ்துவர் என்று ஒரு கும்பல் கட்டமைக்க நினைக்கும்போது அவரை சிறையிலிருந்து காப்பாற்ற நினைக்கிறேன். 

thiruvalluvar

அவர்களின் தகவல்கள் மூலமாகவே திருவள்ளுவர் கிறிஸ்தவர் இல்லை என்று நிரூபிக்க நினைக்கிறேன். கலைஞர் எழுதிய உரைகள் மூலமாக திருவள்ளுவர் பொதுவானவர் என்று நிரூபிக்க நினைக்கிறேன். ராமானுஜர், ஏசுநாதர், நபிகள் நாயகம் இறைதூதர்கள்.

எனது ஸ்பிரிச்சுவல்  நம்பிக்கையை தொடக்கூடாது. ராமானுஜர், ஏசு நாதர், நபிகள் நாயகம்  ஆகியோரை இறைதூதர் இல்லனு சொல்லக்கூடாது. திருவள்ளுவர் இந்து என்பதற்கு 100 உதாரணம் சொல்கிறேன். கடவுள் வாழ்த்து குறளில் இது தெரியும். திருவள்ளுவர் எழுதிய முதல் 10 குறளில் 7 குறள் திருவடி பற்றித்தான் பேசியிருக்கிறார்.

திருவள்ளுவர் இந்து. இந்துவாதான் திருவள்ளுவரை அடைப்பேன் என்று சொல்லவில்லை. என் சேனலில் திருவள்ளுவருக்கு காவி போடுவேன். அதை யாரும் கேட்க கூடாது. பாண்டே கதறல், பாண்டே அலறலுனு போடுங்களேன். என் பாயிண்ட் 4 பேருக்கு போய் சேர்ந்தால் சந்தோஷம். அடையாளம் படுத்திக்கொள்கிறவர்கள்  நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது, நடுநிலையாளரான நான் மற்றவர்கள் என்னை அடையாளப்படுத்தும்போது எனது மனது புண்படுவதில்லை என்று” பாண்டே தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ பாண்டேவின் முழுமையான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.