நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரம் தேவையில்லை என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே  கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.

இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படம் வெளிவந்த நாள்முதல்  பாராட்டுக்களையும் பெற்றாலும் மறுபக்கம் தொடர்ந்து விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

குறிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தில் கதாநாயகன் ராசாக்கண்ணுவை காவல் நிலையத்தில் அடித்து சித்திரவதை செய்யும் எஸ்.ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் படம் கொண்ட காலண்டர் இடம்பெற்றதால், ஒரு வன்முறை போலீஸை வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறி பா.ம.க.வினரும், வன்னியர்களும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் நீக்கப்பட்டது.

jaibhim pandey

பின்னர் மகாலஷ்மி காலண்டர் கொண்ட படம் கிராபிக்ஸ் செய்யப்பட்டது. எனினும் இந்தப் படத்தின் சர்ச்சை ஓயாமல், அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுத, பதிலுக்கு நடிகர் சூர்யா அறிக்கை ட்விட்டரில் வெளியிட என்று முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது. 

இதையடுத்து இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பின்னர் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை ஓய்ந்தது. இந்நிலையில் கலாட்டா சேனலில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உடனான நேர்காணலில், ஜெய்பீம் திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் தேவை இல்லாதது என்று ஜெய்பீம் திரைப்படத்தை பற்றி பாண்டேவின் பார்வையில் கூறினீர்களே என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ரங்கராஜ் பாண்டே  “ஆமாம். அந்த கதாபாத்திரம் தேவையில்லாததுதான். அந்த கதாபாத்திரம் சிரிப்பு கூட வரல. தேவையில்லாம திணிக்கப்பட்டிருக்கு. வேணும்னே அவர மட்டம் படுத்தப்படற மாதிரி காட்றாங்க. சுயநலமாக காட்டுறாங்க.

கதை பிரமாதாமா, ஆழமா, வீரியமா போய்ட்டு இருக்கு. திரைக்கதை, வசனம் கூட நல்லா இருக்கு. நல்லா போகும் திரைப்படத்தில் தேவையில்லாத கதாபாத்திரமா எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் இருக்கு. 

pandey jaibhim

இந்த காதாபாத்திரத்தை வைக்க இயக்குநருக்கு முழுசுதந்திரம் கொடுக்கக்கூடாதா? பிராமணர் கதாபாத்திரம் என்பதற்காக தேவையில்லாதது என்று கருதுகிறீர்களா என்றும் கேட்கப்பட்டது.  ‘இதற்கு முன்னதாக பிராமணர்கள் பத்தி எவ்வளவோ கிண்டல் பண்ணி வந்திருந்தாலும், இந்தப் படத்தில் தேவையில்லாதது என்று கருதுகிறேன். சிரிப்பு வரலை என்பதுனாலதா. சகோதரனா சூர்யாமேல இந்த முத்திரை இல்லாம இருக்கணும்னு ஆசைப்படுறேன். 

நடிகர் சூர்யா நீட் அறிக்கை கொடுத்தபோது, அவருக்கு இதைப்பற்றி பேச  முழுஅருகதை இருக்குனு நான்தான் முதலில் சொன்னேன். அந்த அக்கறையில் தான் சொல்கிறேன்’ என்று கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பத்தி பேசுறேன். நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு அறிக்கை பத்தி தற்போது பேசல. அவரோட ஜெய்பீம் திரைப்படத்தை பத்திதான் பேசுறேன்” என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்தார். 

“பாண்டேவின் பார்வையில், என்றுதான் படத்தை பற்றி கருத்து சொல்கிறேன்.   நடிகர் சூர்யாவுக்கு பெரிய வட்டம் காத்திருக்கு. சின்ன வட்டத்துல மாட்டிக்க வேணாம் என்றுதான் சொல்கிறேன்’ என்று தெரிவித்தார். 

மேலும் “லஷ்மி காலண்டர் இல்லாத வீடே இல்லை. எனினும் சாதியை குறிக்குதுனு அக்னி கலசம் கொண்ட காலண்டரை மாத்திவிட்டு, லஷ்மி காலண்டர் மாட்டியுள்ளனர். அதற்கு பதிலாக இயற்கை காட்சி கொண்ட காலண்டரை வைத்து இருக்கலாம். இயற்கை காட்சி காலண்டரை வைத்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள்” இவ்வாறு ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் முழு நேர்காணல் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.