தனக்கே உரித்தான ஸ்டைலில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் முன்னணி நடிகராகவும் திகழும் சிலம்பரசன் நடிப்பில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸான மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்திருந்தார். பல தடைகளைத் தாண்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்தார்.

இதனையடுத்து 3-வது முறையாக இணைந்துள்ள சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் தயாராகிவருகிறது வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிலம்பரசனுடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி சங்கர், கலையரசன் மற்றும் டிஜே அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பத்து தல படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பத்து தல படத்தின் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்கள் நடிகர் சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எனவே பத்து தல படத்தின் அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.