குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த சிவா ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி அரசு துவக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மதுனிஷா(11) ரோகித் (8) என இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் சிவா மற்றும் முருகம்மாள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக முருகம்மாள் அவரது தந்தை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு இடைப்பட்ட நிலையில் தான், முருகம்மாளுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளக் காதல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்த முருகம்மாள், “இந்த வீடு எனக்கு தான் சொந்தம் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று, மாமனார் மணியிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். 

அப்போது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார்.

அதனை சற்றும் எதிர்பாராத முருகம்மாள், ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அப்போது, சரிந்து விழும் போது முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து விட்டு, உடனடியாக அங்குள்ள காவல் துறைக்கு தகவல் அளித்தனர். 

ஆனால், போலீசார் வருவதற்கு முன்பாகவே மருமகளை வெட்டி கொன்ற மாமனார் மணி, தானாகவே முன்வந்து நாட்றம்பள்ளி போலீசாரிடம் சென்று “மருமகளை வெட்டி நான் கொன்றுவிட்டேன்” என்று கூறி, அவராகவே சரணடைந்து விட்டார்.

இதனையடுத்து, மணி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.