தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு துறை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

ரிலீஸான நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அரங்கு நிறைய வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்ததோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல தடைகளையும் தாண்டி வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மாநாடு வெற்றி குறித்து தனது நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், 

எல்லா புகழும் இறைவனுக்கே,
மாநாடு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்! தனிப்பட்ட முறையில் மாநாடு திரைப்படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. இதுவரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து பல பாடல்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால், இந்த முறை மாநாடு திரைப்படத்தில் மிகக் குறைவான பாடல்களே பயன்படுத்தினோம். இருப்பினும், மாநாடு படத்தில் இடம்பெற்ற எனது பாடல்களையும் பின்னணி இசையையும் மிக நுணுக்கமாக கவனித்து பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே வரவில்லை... இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சிலம்பரசனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரரும் நண்பருமான சிலம்பரசன் மாநாடு திரைப்படத்திற்காக எடுத்துக்கொண்டு அர்ப்பணிப்பும் உழைப்பும் நெகிழ வைத்தது. மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது முழு எனர்ஜியும் கொடுத்து நடித்து மாநாடு திரைப்படத்தை தாங்கும் மிகப் பெரிய தூணாக நிற்கிறார். 

என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் அந்த முழு நன்றி அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.