தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பில் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இயக்குனர் P.S.வினோத் ராஜ் எழுதி இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் இணைந்து நடித்துள்ளனர். 

விக்னேஷ் கும்முளை மற்றும் ஜெய.பார்த்திபன் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பல சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்ட கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான டைகர் விருது பெற்றது. 

மேலும் இந்தியா சார்பில் நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு கூழாங்கல் திரைப்படம்  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக கூழாங்கல் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நாளை(டிசம்பர் 3ஆம் தேதி) சிங்கப்பூரிலும், வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் கூழாங்கல் திரைப்படம் ரிலீஸாகிறது என இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.