“மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

“தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக” அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான ஏற்பாடுகளை தமிழக பாஜக சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வந்தன.

இந்த சூழலில் தான், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சற்று வேகம் எடுத்து தீவிரமாக பரவத் தொடங்கியது.

இதனால், தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு தோறும் முழு நேர நேர ஊரடங்கும் அறித்து, தமிழக அரசு நேற்றைய தினம் அதிரடியாக உத்தரவிட்டது.

அத்துடன், பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்த நிலையில் தான், மதுரையில் சற்று முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேரில் வருகின்றார் என்றும், அன்றைய தினம் மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடத்தப்படும் பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். 

அத்துடன், “பாஜக கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, மோடி பொங்கல் என்ற தலைப்பில் நடைபெற இருந்தது என்றும், அந்த நிகழ்ச்சி, ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும்” அறிவித்தார். 

“இதன் மூலமாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த பிரதமரின் பங்கேற்பும் தடைபட்டு உள்ளது என்றும், பிரதமரின் பிற நிகழ்ச்சிகள் யாவும், தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் என்பதால், அது குறித்து தமிழக அரசு தான் முடிவு எடுத்து, அறிவிப்பு வெளியிடும்” என்றும், அவர் கூறினார்.

மேலும், “பஞ்சாப்பில் பிரதமருக்கு நிகழ்ந்திருக்கும் பாதுகாப்பு குறைபாடு, அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியம் தான் காரணம் என்றும், பிரதமரையும், அவருடன் பயணித்தவர்களையும் பாதுகாப்பில்லா சூழலுக்கு பஞ்சாப் அரசு தள்ளி உள்ளது” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

குறிப்பாக, “சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தொலைவில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்த ஓர் இடத்தில் பஞ்சாப்பின் காங்கிரஸ் அரசு பெரும் நாடகத்தை நிகழ்த்தி உள்ளது என்றும், இதை கண்டித்து தமிழகத்தில் பாஜக பல அமைதி வழி அறப்போராட்டங்கள், பேரணி, வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டம் என அடுத்த ஒரு வாரத்தில் முன்னெடுக்க உள்ளோம்” என்றும், தெரிவித்தார். 

முக்கியமாக, “பிரதமர் நரேந்திர மோடியின் உடல் நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய மந்திர பூஜையை  இன்றும், நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்றும், அண்ணாமலை தெரிவித்துள்ளார்.