தனது காரை உரசி சென்ற கோபத்தில் அரசுப் பேருந்தை துரத்தி சென்ற போது சாலை தடுப்பை தாண்டி மற்றொரு அரசுப் பேருந்து மீது கார் மோதிய மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் மருத்துவர் ரகுபதி ராகவன். இவரது மகன் கார்த்திகேயன் (42). இவரும் தந்தையைப்போல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வந்தார். 

கார்த்திகேயனின் மனைவி ப்ரீத்தா. கார்த்திகேயன்-ப்ரீத்தா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயனின் மனைவி ப்ரீத்தியும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

madurai accident

மதுரையில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் வார விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.

அதன்படி நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் கடந்த சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊரான நெல்லைக்கு வந்துள்ளார். சொந்த ஊரில் நேற்று தங்கி விட்டு கார்த்திகேயன் இன்று காலை நெல்லையில் இருந்து மதுரைக்கு தனது காரில் மருத்துவர் கார்த்திகேயன் புறப்பட்டு சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச்சாலையில்  உள்ள பரம்புபட்டி விமான நிலையம் அருகே கார்த்திகேயன் காரில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசுப் பேருந்து, கார்த்திகேயன் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் கார்த்திகேயன் உடனே அந்த அரசுப்பேருந்தை மறிப்பதற்காக முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. பரம்புபட்டி பெட்ரோல் பங்க் அருகே பேருந்தை முந்திச்செல்ல முயன்று தனது காரை கார்த்திகேயன் வேகமாக ஓட்டியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின்  நடுவில் இருந்த சென்டர் மீடியன் மீது கார் பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் கார் பறந்து சென்று எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

madurai accident

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த கார்த்திகேயன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போராடி காரில் சிக்கி இருந்த டாக்டர் கார்த்திகேயன் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் கார்த்திகேயனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது காரை உரசியதால் ஆத்திரமடைந்து பேருந்தை முந்திச்செல்ல முயன்று சாலையின் மறுபுறம் வந்த பேருந்து மீது கார் மோதிய சம்பவத்தில் மருத்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிசிடிவி கேமராவில் நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து காட்சி பதிவாகியிருந்தது. இதன் 
அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.