ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக தண்டனைப் பெற்று வந்த பேரறிவாளன் தற்போது முதன் முறையாக ஜாமீனில் வெளியே வந்துள்ள சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் என இந்த 7 பேரும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 9 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் தான், உச்ச நீதிமன்ற உத்தரவு படி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், அவர் கடந்த 11 ஆம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 

ஆனால், அப்போது “உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு சிறை அலுவலகத்திற்கு வரவில்லை” என்று கூறி மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் தான், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஜாமீன் பெறுவதற்காக இன்று காலை 6.30 மணிக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்துச் சென்றனர்.

பேரறிவாளன் சிறைக்கு சென்றதும், சிறையில் உள்ள மற்ற விதிமுறைகளின் படி, அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டு முறைபடி அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவரது தாயார் அற்புதம்மாளுடன் பேரறிவாளன் வரும்போது, அவர்களை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டனர். அப்போது, முதன் முதலாக ஊடக வெளிச்சத்தில் பேசிய பேரறிவாளன், “எல்லோருக்கும் நன்றி.. நன்றி” என்று,  நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது” என்று, குறிப்பிட்டார். 

“விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கிற இந்த பிணை, ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அவர் பேசினார்.

“என் மகன் உட்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்ற வரை, உங்கள் அனைவரின் ஆதரவும் அவசியம் என்றும்,  நம்பிக்கையோடு எங்கள் போராட்டம் தொடர்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நிற்கும் முதலமைச்சர், தமிழக அரசு, எதிர்க் கட்சி தலைவர், அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றும், என் மகனின் உண்மை நிலையை உணர்ந்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு தந்த எங்களுக்கு துணையிருந்த வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொது மக்கள், தாய்மார்கள் அனைவருக்கும் நன்றி” என்றும், மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அற்புதம்மாள், மனம் உருகி பேசினார்.