தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. பல விருதுகளை வாங்கிக் குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இதனையடுத்து பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிக்க ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குனர் பார்த்திபன் இயக்கினார்.

இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பார்த்திபன் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார் . குறிப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உலக சாதனை படைப்பாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் இரவின் நிழல். உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படமாக இரவின் நிழல் திரைப்படம் தயாராகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இரவின் நிழல் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இரவு நிழல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிடுவதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில், வருகிற மார்ச் 19ஆம் தேதி மாலை 6:01 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.