சீனாவில் நேற்று ஒரே நாளில் 5,280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 6 நாளில் 6000 படுக்கை வசதியுடன் சீனா புது மருத்துவமனையை கட்டும் பணியை தொடங்கி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் தொற்றானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் இருந்து பரவத் தொடங்கியதாக தற்போது வரை குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயானது, முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது. 

இவற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருக்கும் சூழலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்தியாவைத் தவிர்த்து சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா 4 வது அலையே வந்துவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், சீனாவின் கிழக்கு கடற்கரை உள்ளிட்ட அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அங்கு ஊரடங்கு விதிகள் மீண்டும் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனால், கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளிப்பதற்காக, சீனாவின் ஜிலின் நகரில் மின்னல் வேகத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 

அதன் படி, சுமார் 6 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, வெறும் 6 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு தயாராகி விடும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. 

அதன் படி, சீனாவில் உள்ள வட கிழக்கு மகாணங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் திகழும் ஜிலின் நகரில் இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெறுவதை சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா உறுதி செய்து உள்ளது.

இந்த மாகாணத்தில் ஏற்கனவே கடந்த 12 ஆம் தேதி நிலவரப்படி, 3 தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த 13 ஆம் தேதி  3,400 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவானதாகவும், 14 ஆம் தேதி 2,300 புதிதாக கொரோனா தொற்று உறுதியானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாகவே, சீனா முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலை மிகத் தீவிரமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீன அரசு தற்போது தீவிரமாக இறங்கி உள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.