“ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று, கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்து உள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதம் ஹிஜாப் விவகாரம், மிகப் பெரிய அளவில் விஸ்வரும் எடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக, கநர்நாடகா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அந்தந்த பள்ளி, கல்லூரி நிர்வாகம் அதிடியாக தடை விதித்தது.

ஆனால், இதற்கு எதிராக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடியதால், இஸ்லாமிய மாணவிகள்  தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், இதற்கு பதிலடி தரும் விதமாக, அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்ததால், அங்கு பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. 

இதனால்,  கநர்நாடகா மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், இந்த பிரச்சனையை கையாள முடியாத அந்த மாநில அரசு, வேறு வழியின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளை அதிரடியாக மூடி உத்தரவிட்டது. அதன் பின்னர், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பள்ளிகள் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், அங்கு  ஹிஜாப் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. 

எனினும், இது தொடர்பான வழக்கு அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு கூற இருக்கும் சூழலில் தான், அந்த மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெசரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மங்களூரு, கடலோர மாவட்டங்கள் உள்பட அம்மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டன.

இவற்றுடன், “பெங்களூரு நகர் முழுவதும் இன்று காலை முதல் வரும் 21 ஆம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக” பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார்.

“இதன் காரணமாக 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி கிடையாது” என்றும், கர்நாடக போலீசார் அதிரடியாக அறிவித்தனர்.

இவற்றுடன், பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட 10 ஆயிரம் போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தான், சற்று முன்னதாக இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்தது.

அதன் படி, “கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு என்றும், இதை மாணவர்கள் யாரும் எதிர்க்க முடியாது” என்றும், கூறியது.

அதன் தொடர்ச்சியாக, “ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை  கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது” உத்தரவிட்டது. 

குறிப்பாக, “ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்றும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்” என்றும், கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது.

முக்கியமாக, “ ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும்”  உத்தரவிட்ட நீதிமன்றம், “அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே” எனவும் தனது தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மாணவர்களின் வேலை என்பது படிப்பது தான். எனவே, இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்,
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என்றும், ஹிஜாப் தீர்ப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனது கருத்தினை தெரிவித்து உள்ளார்.