“உயர் நீதிமன்ற வழங்கு விவரங்களை தமிழில் வழங்க வேண்டு” என்று, மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் “உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டும் தான் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான், திருச்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர், வழக்கு ஒன்றின் விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கேட்டிருந்தார். 

ஆனால், இந்த மனுவுக்கான பதிலான, ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, “தமிழ் மொழியில் நீதிமன்ற விபரத்தை தர வேண்டும்” என்று கேட்டு, அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர், “மனுதாரர் கணேசன் கேட்ட விபரத்தை தமிழில் கொடுக்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது நீதிபதி பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, உயர் நீதிமன்றம் தரப்பில், “உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது” என்று, வாதிடப்பட்டது.

“ஆகவே, “ஆங்கிலத்தில் தான் நீதிமன்ற தகவல்களை கொடுக்க முடியும்” என்று, மதுரை உயர் நீதிமன்ற தரப்பு வழக்கறிஞர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு, அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “தமிழில் விபரத்தை கொடுக்க வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து” அதிரடியாக உத்தரவிட்டனர்.

அத்துடன், “இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து” நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, “உயர் நீதிமன்ற வழக்கு விவரங்களை தமிழில் வழங்க இயலாது” என்று, நீதிமன்ற தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி, அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.