“தமிழகத்தில் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில், புத்தக பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வானது, சென்னை கலைவாணர் அரங்கில் சற்று முன்னதாக நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளதாக” பெருமையோடு குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம்” என்றும், கூறினார். 

அத்துடன், “மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம்” என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம்” என்றும், தமிழ் பெருமைகள் பற்றி விவரித்தார்.
 
குறிப்பாக, “தமிழ்நாட்டில் புத்தக பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது என்றும், அந்த வகையில் அனைத்து பதிப்பாளர்களும் பயனடையும் வகையில் அந்த பூங்கா அமையும்” என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், “அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், இந்த புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார்.

முக்கியமாக, “தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான்” என்று சூளுரைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம்” என்றும், பெருமிதத்தோடு நினைவு கூர்ந்தார். 

அத்துடன், “நாங்கள் என்று சொல்வது உங்கள் அனைவரையும் சேர்த்து தான்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த படைப்பாளர்கள் அனைவரையும் கவுரவித்தார். 

அதன் படி, இந்த விழாவில் தமிழ் அமைப்புகளுக்கும், திங்களிதழ்கள் என மொத்தமாக 21 விருதுகளை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை மறைந்த திரு. மு. மீனாட்சிசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை, அவரது மனைவி வசந்தா பெற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, “கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது  நாஞ்சில் சம்பத்துக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரிஅனந்தனுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.