பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் ஷாருக் கான் உலக அளவில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக திகழ்கிறார். முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சல்மான்கான் நடிப்பில் தயாராகிவரும் டைகர் 3, நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட், ஆமீர் கான் கதாநாயகனாக நடித்துள்ள லால் சிங் சத்தா மற்றும் அமிதாப்பச்சன் & ரன்பீர் கபூர் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா உள்ளிட்ட படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான்.

இந்நிலையில் தனது புதிய OTT தளத்தை ஷாருக்கான் அறிவித்துள்ளார்.OTT தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமா புதியதொரு வண்ணத்தையும் பெரிய மாற்றத்தையும் கண்டது. ஆரம்பத்தில் இந்திய திரை உலகில் OTT தளங்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது அரிதாக பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய திரைப்படங்களும் புதிய புதிய வெப்சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் லாக்டவுனுக்குப் பிறகு OTT தளங்களின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. புதுப்புது OTT தளங்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது SRK+ எனும் OTT தளத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த SRK+ OTT தளத்தில் நிறைய புதுப்புது திரைப்படங்களும் வெப்சீரிஸ்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் முன்னதாக இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் ஷாருக்கானின் SRK+ OTT தளத்திற்கு ஒரு படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.