தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படங்களாக அமைந்தன. கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் சல தினங்களுக்கு முன் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் FIR.

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த FIR திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவிலும் ரிலீசாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது மோகன்தாஸ் திரைப்படம்.

இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் சுந்தரமூர்த்தி.KS இசையமைக்க அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் திரைப்படத்தின் டீசர் நாளை (மார்ச் 16ஆம் தேதி) ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.