நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும், மிக குறுகிய இடைவெளியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதாலும் கூட்டணி கட்சிகள் இட ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்நிலையில் இடப்பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால் இடப்பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று வரை பிரதான கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. தி.மு.க. கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க., தங்களுக்கு போதிய இடங்களை ஒதுக்க அ.தி.மு.க. முன்வரவில்லை எனக்கூறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. தனித்து களம் காண்கிறது. அதேபோன்று பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., சமத்துவ மக்கள் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன.  

மேலும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மாநகராட்சி வார்டு - 14,701, நகராட்சி-23,354, பேரூராட்சி -36,361 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.