தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து முதல் அலையை காட்டிலும் 2-வது அலையில் கோரத்தாண்டவம் ஆடியது. 

இரண்டாவது அலை முடிந்து உலக நாடுகள் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியநிலையில், மீண்டும் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. 

omicron Tamil Naduகடந்த மாதம் 24 ஆம் தேதி முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தற்போது இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டநிலையில், 21 நாளில் தொற்று எண்ணிக்கை 300-ஐ தாண்டி உள்ளது. 

ஒமிக்ரான் வகை கொரோனாவின் அதிகபட்ச பாதிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 பேர் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு ஒமிக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டது. 

அந்தவகையில் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வரலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதாரத் துறை இயக்குனர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் பணி நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

omicron Tamil Nadu lockdownமேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் பயனில்லை என்றும், பொது இடங்களான வணிக வளாகங்கள், மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்த வழிக்காட்டுதல்களை முறைப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், ஒமிக்ரான் தொற்று வேகமாக இருக்கும் நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்க ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.