கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் முட்புதரில் கிடந்த  15 வயது சிறுமி வழக்கில், சிறுமியை கொலை செய்ததாக அவரின் குடும்ப நண்பரொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் நேற்று காலை 10 மணியளவில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. 

இதனால் சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணம்பட்டி காவல்துறைக்கு தூய்மை பணியாளர்கள் தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் துறையின் உதவியோடு சோதனை மேற்கொண்டதில், அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் கலைவாணி என்பவர் தனது மகளை கடந்த 11-ந் தேதி முதல் காணவில்லை என்று கடந்த 13-ம் தேதி புகார் கொடுத்தது தெரிய வந்தது. 

coimbatore school student murder

கலைவாணி தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவருடைய 2-வது மகளான 15 வயது சிறுமி, சரவணம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 11-ந் தேதி முதல் காணாமல் போய் உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கலைவாணியை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர் வந்து பிணமாக கிடந்த சிறுமியின் உடலை பார்த்து கண்கலங்கினார். இறந்து கிடப்பது தனது மகள் தான் என்று அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார். 

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வந்தனர்.

சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கலைவாணி மற்றும் அவரது ஆண் நண்பர் முத்துக்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப நண்பர் என்று கூறப்படும் முத்துக்குமாரும், சிறுமியின் தாய் கலைவாணியும் நெருங்கி பழகி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் முத்துக்குமாரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகையை சிறுமியின் தாய் கலைவாணி வாங்கியுள்ளார். அந்த தங்க நகையை சமீபத்தில் முத்துக்குமார் திருப்பித் தருமாறு கலைவாணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளிடம் நகை இருப்பதாகவும், அவள் தர மறுப்பதால் தான் அவளிடம் பேசி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தன்று சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த முத்துக்குமார், அவரிடம் நகையை கேட்டு மிரட்டியதாகவும், மேற்கொண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலுக்காக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் சிறுமி குடும்ப நண்பர் என்று கூறப்படும் முத்துக்குமாரிடமிருந்து தப்பிக்க போராடியுள்ளார். ஆனால் சிறுமியை தப்பிக்கவிடாமல் இருக்க அவரின் கழுத்தை நெரித்து முத்துக்குமார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

coimbatore murder

பின்னர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அருகிலிருந்த குட்டையில் முத்துக்குமார் வீசி சென்றுள்ளார். இவற்றை காவல்துறை விசாரணையில் முத்துக்குமாரே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தன்மேல் சந்தேகம் வராமல் இருக்க காணாமல் போன சிறுமியை தேடுவது போலவும், கலைவாணி சிறுமியை காணவில்லை என புகார் அளிக்க உதவி செய்வது போலவும் முத்துக்குமார் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை முத்துக்குமார் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முத்துக்குமார் மீது போக்சோ உள்பட 4 வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றும், மருத்துவ அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.