மருத்துவ படிப்பை முடித்தவர்கள் கிராமப்புற சேவையை கடமையாக நினைத்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

mkstalinசென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி பேசியதாவது: உங்களில் பலருக்கு மருத்துவம் என்பது உங்களது கனவாகவோ சிலருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கனவாகவோ இருந்திருக்கும். ஆனால் மருத்துவம் படிக்க நீங்கள் கல்விச்சாலைக்குள் நுழையும்போது அது அந்த கல்விச்சாலையின் கனவாக மாறிவிடுகிறது. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களை நாட்டுக்கு சேவையாற்ற அன்போடு அழைக்கிறேன். மருத்துவம் என்பது வேலை அல்ல. அது ஒரு சேவை. மதிப்பும், மரியாதையும், போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள சேவையைத்தான் நாளை முதல் நீங்கள் தொடங்க இருக்கிறீர்கள் என முதலவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் மருத்துவ கண்டுபிடிப்பாளர்களாக சமூக அக்கறை கொண்டவர்களாக வளர்ந்து பெயர் பெற வேண்டும். பட்டம் வாங்கியதோடு படிப்பு முடிந்துவிடவில்லை. இனிமேல்தான் புத்தக படிப்போடு சேர்ந்து சமூகத்தையும் படிக்க போகிறீர்கள். படித்துக்கொண்டே சேவையாற்ற போகிறீர்கள். அத்தகைய டாக்டர்களாகிய உங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

அதனைத்தொடர்ந்து மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்பது கருணாநிதியின் சிந்தனையில் உதித்த திட்டமாகும். 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பல்வேறு மாவட்டங்களில் உருவாக்க தொடங்கினோம். அதுதான் பல்லாயிரக்கணக்கான டாக்டர்கள் உருவாக காரணமாக அமைந்தது. புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி பெற்று அதனை தொடங்கி வைக்கும் விழா விரைவில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் குழந்தைகள் உயிர் காத்திட அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவிகளை அதிகம் அளித்தவரும் கருணாநிதிதான். இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். 108 அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி கொடுத்தவரும் கருணாநிதிதான். 2 கோடியே 11 லட்சம் பேர் பயன் பெறக்கூடிய வகையில் பொதுமக்களிடம் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை அளிக்கும் நலமான தமிழகம் என்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதலில் தொடங்கியது கருணாநிதி ஆட்சியில்தான். அந்த வரிசையில் இப்போதும் பல்வேறு திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.

மேலும் 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.139.8 கோடி நிதி அளிக்கப்பட்டு உள்ளது. 188 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளது. மருத்துவ நூல்கள் மக்கள் மொழியில் இருப்பதுதான் மக்களாட்சி. அதன் அடிப்படையில் தமிழ்மொழியில் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக நடத்தப்படுவதால் 8 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்ட அரசாக தமிழக அரசு செயல்பட்டு வரும் இந்த வேளையில் நீங்கள் டாக்டர்களாக சேவையாற்ற வந்துள்ளீர்கள். அனைவரையும் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமப்புற மருத்துவ சேவை என்பது பெரும் சவாலாக உயர்ந்திருக்கிறது. மருத்துவ படிப்பை முடித்துவிட்டு டாக்டராக பணியாற்ற நீங்கள் கிராமப்புற சேவைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் வந்திருக்கும் நீங்கள் கிராமப்பகுதிக்கு சென்று மருத்துவ சேவை ஆற்றுவது கடமை என நினைத்து செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் மக்கள் மருத்துவர்கள் என்ற சிறப்பான பெயரை பெற வேண்டும் என்று முதலவர் பேசினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பெருந்தொற்றும் சிக்கல்களும்: மீட்பும் தாங்குதிறனுக்குமான பாடங்கள் என்ற தலைப்பிலான ஆங்கில நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன் உள்ளிட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.