மருத்துவமனையில் சேர்க்காமல் யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). அதேப்பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வரும் இவருக்கு, கோமதி (28) என்ற பெண்ணுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்நிலையில் கர்ப்பமுற்ற கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

மனைவிக்கு பிரசவ வலி வந்ததை அடுத்து லோகநாதன் மருத்துவமனையில் சேர்க்காமல், தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மனைவிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில், லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். 

vellore husband and wife you tube

அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கோமதியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கோமதி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதன் அடிப்படையில் யூ- டியூப் மூலமாக மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.