சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக  திகழும் நடிகை சமந்தா, தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் தனது கலக்கலான நடனத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னதாக இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தில் இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தயாராகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்திலும் , தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து முதல்முறை ஹாலிவுட்டில் கால்பதிக்கும் சமந்தா, இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் துரை படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வரிசையில் அடுத்ததாக சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் புதிய திரைப்படம் யசோதா. யசோதா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார்

ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் யசோதா திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இணைந்து இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்க எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவின் யசோதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.