“45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கீழ் நிலையில் உள்ள போலீசாரை, உயர் அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதா?” என்று கேள்வி எழுப்பி உள்ள நீதிமன்றம், “ஆர்டர்லிகளை திரும்ப பெற வேண்டும்” என்று, நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதாவது, தமிழ்நாடு காவல் துறையில் ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை உயர் அதிகாரிகளின் வீட்டில் உதவி பணிக்கான ஆட்கள் என்று கூறப்படும் “ஆர்டர்லி முறை” அமலில் இருந்து வருகிறது. 

இவற்றுடன், தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 1.20 லட்சம் பேர் காவல் துறையில் பணியாற்றி வருவதாகவும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 

இதில், சுமார் 5 ஆயிரம் பேர் “ஆர்டலி முறை” யில் பணியில் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான், “உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதாவது, “நீதிமன்ற உத்தரவிட்டும் காவலர் குடியிருப்பை காலி செய்யாத மாணிக்கவேல் என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு முன்னதாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டர்லிகள் குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ள உத்தரவில், “ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் போலீசாரை, சக உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம்” என்று, நீதிமன்றம் கண்டித்து உள்ளது.

அத்துடன், “அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆர்டலிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்.

மேலும், “அரசியல்வாதிகளும், காவல் துறையும் கூட்டு சேர்ந்து செயல்படக்கூடாது என்றும், இது அழிவுக்கு கொண்டு செல்லும்” என்றும், நீதிபதி விமர்சித்து உள்ளார்.

“அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறு தான் என்றும், இது குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் என்றும், ஊரில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்து விட்டு, காவல் துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று கூறுவது?” என்றும், நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையானது வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் ஒத்தி வைத்தார். 

இதனையடுத்து, ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளுமாறு தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாகவும், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்” தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.