10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெளியாகி உள்ள நிலையில், இதில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100 க்கு 100 எடுத்து சாதித்து காட்டி உள்ள நிலையில், ஆங்கிலத்தில் 45 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னதாக வெளியிட்டார். 

அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதியிருந்த நிலையில், இவர்களில் 90.07 சதவீதம் மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அதிலும், 10 ஆம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில்,  4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும், 3 ஆம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 

முக்கியமாக,மாணவர்கள் 85.8 சதவீதம் பேரும், மாணவிகள் 94.38 பேரும் தேர்ச்சி பெற்று, வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதன்படி, மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9 சதவீதம் அளவில் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் 95.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 90.07 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், தற்போது தேர்ச்சி விழுக்காடு சற்று குறைந்து உள்ளது. 

மேலும், 10 ஆம் வகுப்பில் 97.22 சதவீதம் தேர்ச்சியுடன் தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது. 

அதே போல், வெறும் 79.87 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று, வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்து உள்ளது.

முக்கியமாக, 10 ஆம் வகுப்புத் தேர்வில் 85.25 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அத்துடன், 10 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் என்றும், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, 10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்று உள்ளார். அதாவது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சங்கரவித்யாலாயா பள்ளியில் பயிலும் மாணவி துர்கா, தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதித்து காட்டி உள்ளார்.

அதே போல், 10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 45 மாணவர்கள் ஆங்கிலத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

அதே போல், கணிதத்தில் 2186 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3841 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் ஆயிரத்து 9 மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.