காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவியை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து காதலிக்கும் படி நெருக்கடி கொடுத்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் அனிதா, அங்குள்ள மோகனூரில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

அத்துடன், தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதங்களாக வீட்டிலேயே இருந்த படி, ஆன்லைனில் படித்து வந்த அனிதா, நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனால், வீடு திரும்பிய அனிதாவின் பெற்றோர் மற்றும் அனிதாவின் தங்கை ஆகியோர் கதறி அழுதனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து அனிதா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஆய்வு செய்தனர். 

அதே நேரத்தில், அனிதாவை ஒரு தலையாகக் காதலித்து வந்த 21 வயதான வல்லரசு, அவரது நண்பர்கள் 21 வயதான அய்யமுத்து, 20 வயதான கோகுல்நாத் ஆகியோர் நேரில் வந்து துக்கம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தங்கை, “என்னுடைய சகோதரி இறந்ததற்கு நீங்கள் தான்டா காரணம்” என்று, சத்தம் போட்டு கதறிய படியே, வல்லரசுவை அடித்து உள்ளார். இதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள், துக்கம் விசாரிக்க வந்த இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இளைஞர்களை அங்கு நின்றிருந்த போலீசார் அவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற போது, அங்கு  உறவினர்களும் பொது மக்களும் திரண்டு போலீசாரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அத்துடன், இளம் பெண்ணின் உறவினர்கள் அங்கு திடீரென்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு கூடுதல் போலீசார் 
வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரமாக நடந்த சாலை மறியலின் இறுதியில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையால், உடன்பாடு ஏற்பட்டு உறவினர்கள் போராட்டத்தை கை விட்டனர்.

மேலும், பிடிபட்ட இளைஞர் வல்லரசிடம் போலீசார் விசாரித்த போது, “வல்லரசும் - அனிதாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து வந்து உள்ளனர். 

அப்போது, 10 ஆம் வகுப்பு வரை காதல் தொடர்ந்து உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அனிதா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், அனிதா வல்லரசை காதலிக்க மறுத்து விட்டு, தனது படிப்பிலேயே முழு கவனமும் செலுத்தி வந்தார். 

ஆனால், வல்லரசு விடாமல் அடிக்கடி அனிதாவை பின் தொடர்ந்து தன்னைக் காதலிக்கும்படி, தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா, திடீரென்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டு உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக அனிதாவின் உறவினர்கள் தாக்குதலில் காயமடைந்த வல்லரசும், அய்யமுத்துவும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.