வீடு வீடாக பெண்களின் கையைப் படித்து வாக்கு கேட்கும் நடிகை குஷ்பு, நடையாய் நடந்து நூதன முறையில் வாக்கு சேகரித்து வருவது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. 

திமுகவின் கோட்டை என்று பெருமை பேசப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிடும் நடிகை குஷ்பு பாஜக சார்பில் களமிறங்கியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும்  எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. 

முக்கியமாக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிடம் கடந்த 10 ஆண்டுகளாக கற்ற மொத்த அரசியலையும் தனி ஆளாகத் தேர்தல் களத்தில் காட்டி வருகிறார் நடிகை குஷ்பு. ஆணாதிக்கம் மிக்க அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தோடு அடுத்த அயர்ன் லேடியாக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நடிகை குஷ்புவிற்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், பிரச்சார வாகனத்தில் ஏறி நின்று கொண்டு, வாக்காளர்களைப் பார்த்து சிரித்தோம், கை அசைத்தோம் என்று கடமைக்கு வாக்கு சேகரிக்காமல், வழக்கமான அரசியல் பாணியில் இருந்து முற்றிலும் விலகித் தனி ஒருவராகத் தெரிய தொடங்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. 

“நான் மிகப்பெரிய நடிகை, நட்சத்திர வேட்பாளர்” என்ற பந்தா எதுவுமே குஷ்புவிடம் துளியும் கிடையாது என்றும், மக்களை வீடு, வீடாகச் சென்று தனித்தனியாகச் சந்திக்கிறார் என்றும், மக்கள் கூறும் குறைகளைச் செவி கொடுத்துக் கேட்பதோடு.. தன்னால் நிச்சயம் தீர்வு கொடுக்க முடியும் இதை நான் உங்களுடைய மகளாக, சகோதரியாக உறுதியளிக்கிறேன் என்றும், அவர் மனப்பூர்வமாக வாக்குறுதி அளித்து வருகிறார்” என்றும், சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

கொரோனா பரவல், கொளுத்தும்  வெயில் என அரசியல் களத்தில் ஆண் வேட்பாளர்களே ஜகா வாங்கும் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில் கில்லியாக ஆதரவு திரட்டி வருகிறார் நடிகை குஷ்பு. ஒரு நாள் கூட தவறாமல் ஆயிரம் விளக்கின் அனைத்து சந்து பொந்து தெருக்களிலும், குறுகலான சாலைகளிலும் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் குஷ்பு, ஒவ்வொரு வாக்காளர்கள் வீட்டு வாசலிலும் நின்று, அவர்களுடைய கைகளைப் பற்றி “நான் இருக்கிறேன்” என்ற நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசி வருவதாதல், குஷ்புவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.

“நான் ஒரு தாய். அதனால், எனக்குக் குழந்தைகள் பிரச்சனை தெரியும். நான் ஒரு பெண். அதனால். பெண்கள் படும் துயரம் புரியும்” என்றும், ஆயிரம் விளக்கில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நடிகை குஷ்பு. இதனால், அவருக்குப் பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்து உள்ளது. 

இது வரை எந்த வேட்பாளர்களும் செய்ய முடியாத அளவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் சுமார் 85 சதவீதம் பகுதிகளில் குஷ்பு நடந்து சென்று தான் வாக்கு சேகரித்துள்ளார். மக்களோடு மக்களாகக் கலந்து இருக்க வேண்டும் என்பதை விரும்பும் குஷ்பு எவ்வித பிரச்சார வாகனத்தையோ, திறந்தவெளி  ஜீப்பையோ தன்னுடைய பரப்புரைக்குப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை என்று சக அரசியல்வாதிகளே கூறும் அளவுக்கு அவரது பிரச்சார யுக்தி வித்தியாசமாக இருக்கிறது என்றும், கூறப்படுகிறது.

இப்படி கால் வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் குஷ்புவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், குஷ்பு பிரச்சாரத்திற்காகக் கிளம்பி விட்டார் என்று தெரிந்தாலே ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் அராத்தி தட்டுடன் குஷியாக கிளம்பி வந்து விடுகின்றனர் என்பதையும் அந்த தொகுதியில் காணமுடிகிறது. அத்துடன். தங்கள் வீட்டுச் சொந்த மகளை வரவேற்பதைப் போல பட்டாசு வெடித்தும், அராத்தி எடுத்தும், மலர் தூவியும் தட புடலாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 

அதே போல், “வாக்களியுங்கள் தாமரைக்கு.. வாய்ப்பளியுங்கள் உங்கள் சகோதரிக்கு” என்ற குஷ்புவின் பிரச்சார வாசகமும். ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை சுண்டியிழுக்க ஆரம்பித்து உள்ளது என்றும், கூறப்படுகிறது. ஏற்கனவே, நடிகை குஷ்புவிற்கு பெண்களின் ஆதரவு பெருமளவில் பெருகி வந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் அவருக்கு சாதகமாக அமைந்து உள்ளன. 

குறிப்பாக, கடந்த சில நாட்களாக வெளியாகும் பிரபல தொலைக்காட்சி, பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பின் படி, “கணிசமான வாக்குகளைப் பெற்று குஷ்பு அமோக வரவேற்பு பெறுவார்” என்றும் கூறப்படுகிறது.