சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டியது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும். 

இது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசாவை நோக்கி நகரக்கூடும். பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. 

WEATHERMAN

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனவும், வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை டிஜி மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “தற்போது அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. 

காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகுதான் அமைப்பின் திசை மற்றும் தீவிரத்தை அறிய முடியும். எவ்வாறாயினும், டிசம்பர் 3 ஆம் தேதி இரவு முதல் வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.  இது குறித்து இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

"அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதி குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

WEATHERMAN PRADEEP JHON

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்று இரவு முதல் காலை வரை கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், இன்று இரவு முதல் காலை வரை கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மழை சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், கடந்த காலங்களில் அரபிக்கடலில் ஒரு தாழ்வு நிலை உருவாகி, இது மறுபுறம் உள்ள மேகங்களை இழுப்பதன் மூலம் தொடர்ந்து 50-100 மி.மீ மழைப்பொழிவைத் தரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tonight to morning we need to be careful, as we can see the pull effect rains are happening with winds converging right over Chennai, Kancheepurm, Tiruvallur and Chengalpet.

— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 30, 2021