வேதா நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது வேதா இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு சட்டப்பேரவையில் பிறப்பித்தது. 

அதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 67.95 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது.

j deepa, j deepak vedha illam jayalalitha

“ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி உள்ளது. 

ஆகவே அதுதொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்துவந்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 24/11/2021 மதியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார். தீர்ப்பில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. 

jayalalitha poes garden j deepa

கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமான வரி நிலுவை போக, மீதியைத் தீபா, தீபக்கிடம் கொடுக்கலாம். வரிப் பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம். நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீட்டை அரசுத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த தீர்ப்புக்கு தனது மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தீபா தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் 3 வாரத்திற்குள் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் ஆகியோர் மனு அளித்தனர்.

மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தீபா, தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் வேதா இல்லத்தின் சாவியை பெறுவதற்காக இன்று தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை மாவட்ட அலுவலகத்துக்கு வந்தனர். இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இருவரிடம் வழங்கினார்.

நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து நிலையில், இதுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் விஜயராணி கூறியுள்ளார். இதனையடுத்து  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

“என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும்” என்றார்.

மேலும் வேதா இல்லத்தின் சாவியை பெற்றுக்கொண்ட ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு வருகை தந்தனர்.