கணவனே மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் கொளத்தூரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதில் மயங்கி விழுந்து விட்டதாக கூறிய அந்த பெண்ணின் கணவர் வினோத்குமார், அடிப்பட்ட தனது மனைவியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். 

அங்கு ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர்கள், “இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறி உள்ளனர்.

ஆனால், ஹேமாவதியின் பெற்றோர்கள் “எங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வினோத்குமார் தான் அவரை கொலை செய்திருப்பார்” எனவும் கூறி, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும், ஹேமாவதியின் பிரேதப் பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது போலீசாருக்குத் தெரிய வந்தது. இதனால், வினோத் குமாரை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வினோத்குமார்,  உண்மையை ஒத்துக்கொண்டார். 

இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் புகைப்பட கலைஞர் என்பதால், பல பெண்களின் புகைப்படங்களை வைத்திருந்தேன்.

அதனைப் பார்தது சந்தேகமடைந்த மனைவி ஹேமாவதி, உறவினர் உட்பட பல பெண்களை சேர்த்து வைத்து பேசி, தினமும் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கோபத்தில் நான் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” என்றும் கூறியிருக்கிறார்.

இதன் மூலமாக, மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து, காவல் துறையினர் இதனை கொலை வழக்காக மாற்றி, வினோத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், இந்த விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, மனைவியை கொன்று விட்டு விபத்தில் இறந்து விட்டது போல், கணவரே நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.