20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

omicron

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று செளதி அரேபியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  வட ஆப்பிரிக்காவில் இருந்து செளதி அரேபியா வந்த ஒருவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவில்தான் முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வாஷிங்டன் டி.சி.யில் பேசிய அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய அமெரிக்கர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கூறினார். நவம்பர் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29-ம் தேதி தொற்று உறுதியாகி இருப்பதாக அந்தோணி ஃபவுசி தெரிவித்தார்.

இந்நிலையில் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கூறிய அந்தோணி ஃபவுசி, ஒமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அமெரிக்க இளைஞருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஃபவுசி அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும்  ஒமிக்ரான் கிருமி முதல் முதலில் கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் இரு மடங்காக உயர்ந்திருப்பதால் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய அனைவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே 60 வயதினருக்கும் மேற்பட்டோருக்கு கட்டாய தடுப்பூசி அளிக்கும் திட்டத்திற்கு கிரீஸ் அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி தெரிவித்தார்.