“தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறுவார்கள் என்றும், ஆனால் நாளை முதல் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்” என்றும், காவல் துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கையானது கடந்த சில வாரங்களாகவே மீண்டும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் நாளோன்றுக்கு போன மாதம் சுமார் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த தொற்று எண்ணிக்கையானது முதலில் சுமார் 100 ஆகவும், அதன் பின்னர் 200 ஆகவும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாகவே பரவி வருகிறது.

அதே போல், கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதி எச்சரிக்கை செய்திருந்தார். 

அத்துடன், “தமிழ்நாட்டில் கடந்த 2 வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்து உள்ளது என்றும், அதே நேரத்தில் 13 மாவட்டங்களில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று எண்ணிக்கையானது மிக விரைவில் தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவும் அபாயம் உள்ளதாகவும்” கடந்த வாரம் மருத்துவ நிபுணர்கள் புதிதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் உருமாறிய கொரோனா வைரசானது தற்போது 8 வகையாக பரவிக்கொண்டு உள்ளதாகவும், இதில் பி.ஏ.5 என்ற வைரஸ் தமிழகத்தில் கிட்டாட்ட 25 சதவீதம் காணப்படுவதாகவும்” தற்போது எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, தமிழகத்தின் சில முக்கியமாக நகர் பகுதிகளில் இந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது சற்றே அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இந்த தொற்றை கட்டுப்படுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக “தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு” உள்ளது. 

அந்த வகையில், தமிழக பொது சுகாதார துறை சட்டம் 1939-ன் படி இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. 

இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சோதனை குறித்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் பேசும் போது, “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதன் காரணமாகவே, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று, குறிப்பிட்டார். 

அதன்படி, “இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி, முகக்கவசம் வழங்கி பொது மக்களுக்கு தமிழக காவல் துறை சார்பில் அறிவுறை வழங்கி வருகிறோம் என்றும், ஆனால் நாளை முதல் பொது மக்கள் இது போன்று முகக்கவசம் அணியாமல் வந்தால், கண்டிப்பாக அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்” என்றும், எச்சரிக்கையாகவே தெரிவித்து உள்ளார்.