“நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து எங்க மகளை மீட்டுத்தாருங்கள்” என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ள நிலையில், திருவண்ணாமலை ஆசிரமத்திற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நித்தியானந்தாவைச் சுற்றியும், அவர் நடத்தி வந்த ஆசிரமத்தை மையப்படுத்தியும், பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த நிலையில், நத்தி மீது பாலியல் புகார்களும் வரிசை கட்டி நின்ற நிலையில், அவர் ஒரே அடியாக தலைமறைவானார்.

அதன் தொடர்ச்சியாக, “இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்தியானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வந்தார்.

இந்த சூழலில் தான், “கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும்” சமீபத்தில் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சீடர் கூறியிருந்த நிலையில், இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், “நித்தியானந்தா உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது கோமாவில் இருக்கிறாரா?” என்று, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், கைலாசாவில் நித்தியின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குறு பூஜை நடத்தப்பட்டது தொடர்பான செய்திகளும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், பக்கதர்கள் பலரும் குழப்பம் அடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் இருக்கும் எப்புடு என்ற மாவட்டத்துடன் கைலாசா, இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக அறிவித்து உள்ளது. இது குறித்து கைலாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்த சூழலுக்கு மத்தியில் தான், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ் - மாலா தம்பதியரின் மகளான வர்தினி என்ற பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்திருக்கிறார்.

அதாவது, “ஸ்ரீ நாகேஷும் அவரது மனைவி மாலாவும் நித்தியானந்தரின் சீடர்களாக இருந்து வந்த நிலையில் தான், இந்த தம்பதியரின் மகள் வர்தினி அங்கு சீடாக சேர்ந்திருக்கிறார்.

அவர் சீடராக சேர்ந்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், தற்போது “எனது மகளை நித்தியானந்தர் ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களிடம் காண்பிக்க கூட மறுக்கிறார்கள்” என்று கூறி, கதறி அழுத நிலையில், “எங்கள் மகளை மீட்டு தருாங்கள்” என்று, பெங்களூரு காவல் நிலையத்தில் அவர்கள் பரபரப்பான புகார் ஒன்றை அளித்து உள்ளனர்.

அத்துடன், “நித்தியின் ஆசிரம நிர்வாகிகள் வர்தினியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருப்பதாகவும்” அந்த பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அந்த வகையில், “இப்போது எங்கள் மகள் திருவண்ணாமலை ஆசிரமத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும், தங்கள் மகளை காவல் துறையினர் விரைந்து மீட்டு தர வேண்டும்” என்றும், திருவண்ணாமலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில், திருவண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் அதிரடியாக நுழைந்து அங்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக நித்தியின் சீடர்களிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், நித்தி மீதான புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில், தற்போது தங்களது மகளை மீட்டுத் தரச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவத்தில், நித்தியின் மீதான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.