“ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டு உள்ளது சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டு அரசியல் அதிமுகவால் பெரும் பரபரப்பாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருப்பது தான், அதற்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

இந்த சூழலில் தான், “அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என அறிக்கை விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி, ஒரு பரபரப்பான சூழுக்கு மத்தியில் தான், இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சற்று முன்னதாக நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

முக்கியமாக, “அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தம் உள்ள 74 பேரில் 65 பேர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்தது என்றும், தகவல்கள் வெளியானது.

இந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றும், அதிமுகவை வழி நடத்த தலைமையை தேர்ந்தெடுப்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது” என்றும், கூறினார்.

மேலும், “அதிமுக சட்ட விதிகளில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில், அதிமுக தலைமை கழகத்தை வழி நடத்த தலைமை கழக நிர்வாகிகள் உரிமை உண்டு” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

முக்கியமாக, “அதிமுக அடிப்படை விதியையே ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியவில்லை என்றும், அதிமுகவுக்கு பல துரோகங்களை அவர் செய்து உள்ளார் என்றும், ஒட்டு மொத்த துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்” என்றும், ஜெயக்குமார் மிக கடுமையாக விமர்சனம் செய்தார். 

“அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் தெரியும்” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெளிப்படையாகவே தெரிவித்தார். 

இதனால், “பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்சை நீக்க திட்டம் உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

அதே நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி, அதிமுகவில் மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.