தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர்திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்த கம்பியில் உரசிதியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு.

தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்த கம்பியில் உரசி உள்ளது. இதனால் ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் விமர்சையாக சித்திரை திருவிழா களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்தில் நடைபெறும்.  கிட்டத்தட்ட 94 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தேர்த்திருவிழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் இந்த சூழலில் நேற்று இரவு 10 மணிக்கு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியுள்ளது.  

இந்நிலையில் சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பரின்  உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். தேர்த்திருவிழாவில் ஊரிலுள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட தேர்பவனி முடியும் நிலைக்கு வந்த நிலையில் அங்கிருந்த பள்ளம் ஒன்றில் தேரின் சக்கரம் சிக்கியுள்ளது. அத்துடன் தேர் நின்ற இடத்திற்கு மேல் பகுதியில் உயர்மின் அழுத்தக் கம்பி சென்றுள்ளது தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் உயர் மின்னழுத்த கம்பி சென்றுள்ளது. அத்துடன் தேர் வருவதற்காக சாலையில் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.  அதிலும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. மூன்று மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த பெரும் விபத்தில் மூன்று  சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தஞ்சை, களிமேடு தேர்பவனிக்கு தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெறவில்லை. தேர்பவனி விபத்து குறித்து அதிகாலை 3 மணியளவில் தகவல் வந்தது. தகவல் கிடைத்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தோம் என்று  தீயணைப்புத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளது. 

தேர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நான் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் அத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் சென்று  நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசு விபத்தில் இறந்தோருக்கு தலா 2 லட்சமும் படுகாயம் அடைந்தோருக்கு 50,000 நிவாரணம் அறிவித்துள்ளது.

மேலும் அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில் பின்வரும் இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தீர்மானம் : மிகுந்த துயரமான இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன் என்று உரையாற்றினார். இதையடுத்து சபாநாயகர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த நிலையில், அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தேர் விபத்து குறித்து ட்விட்டரில்  இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் - ஈபிஎஸ்  இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு மாபெரும் துயரம் ஏற்பட்டிருப்பதை சொற்களால் விவரிக்க இயலாது. இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் இவ்விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேர்களின் குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும் அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.