கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  

சட்டபேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், ஒருமுறை சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும்,  அறுபது ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.  

மேலும் மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அரச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்தார். கைம்பெண் மறுமண நிதி உதவி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரியார் சமத்துவப்புரம் ததிட்டம் தந்தவர். வி.சிங், குஜ்ரால், வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களால் கலைஞர் கருணாநிதி பாராட்டப்பட்டவர்.

தமிழ்நாட்டின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கலைஞர். நவீன தமிழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பரந்து விரிந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கருணாநிதி.  நின்ற தேர்தல்கள் அனைத்திலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி தான். அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரத்தை உருவாக்கியவர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத கருணாநிதியின் மறைவிற்கு இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து பேசியவர் திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் அவர்கள் பிறந்துதித்த நாளான ஜூன் 3 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின்  சிலை நிறுவப்படும். ஜூன் மூன்றாம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும். அத்துடன் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா  அரசு விழாவாகக் கொண்டாடப்படுமென இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும். அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பன்முகத் திறன்கொண்ட கலைஞரின் பங்களிப்புகளிலேயே போற்றுதலுக்குரியது மாநில உரிமைகளுக்காக  அவர் நடத்திய போராட்டங்களேயாகும். 

மேலும் எனவே, மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் அல்லது மாநில உரிமைகள் நாள் என அறிவித்துக் கொண்டாட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.